துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் வெட்டிப்படுகொலை: தாய் மாமன் தப்பி ஒட்டம்

Author: Udhayakumar Raman
7 September 2021, 1:29 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தாய் இறந்த துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் வெட்டிப்படுகொலை செய்து விட்டு தாய் மாமன் தப்பி ஒடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மடத்துப்பட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் மகன் தீபாமணி (36) இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி கருத்து வேறுபாட்டால் அவர் தாயார் ஊரான முத்தார்பட்டியில் வசித்து வருகிறார்.தீபாமணியின் தாயார் லெக்கம்மாள் நேற்று முன்தினம் இயற்கை மரணம் அடைந்த நிலையில் நேற்றிரவு ஈமச்சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து உறவினர்களும் ஈமச்சடங்கில் கலந்துகொண்ட போது, தீபாமணி மதுபோதையில் தனது தாய் மாமன் மனோகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மனோகரன் அரிவாளால் தீபாமணியை கழுத்தில் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த தீபாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சுழி போலீசார் தீபாமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி மனோகரனை திருச்சுழி போலீசார் தேடி வருகின்றனர். கொலையான தீபாமணி மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 143

0

0