குடும்பத்தகராறு காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு மகன் கொலை:தந்தை தலைமறைவு…

Author: kavin kumar
28 October 2021, 2:56 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே குடும்பத்தகராறு காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(20). இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் அருகே, தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் பாலசுப்ரமணி கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில்,இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் பாலசுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் கிடந்த காட்டுப்பகுதியிலிருந்து உடைந்த நிலையில் நாட்டு துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், அந்த துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து பாலசுப்பிரமணி உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்நிலையில் விசாரணையில், பாலசுப்பிரமணியின் தந்தை அழகர்(எ)ராஜாவிற்கு 2 மனைவிகள். அதில் இளைய மனைவி அம்சவள்ளிக்கு பிறந்தவர் பாலசுப்பிரமணி என்பதும் தெரியவந்தது. மேலும் அவ்வப்போது அழகர் குடும்பத்தில் தகராறு செய்வதும் அதை பாலசுப்பிரமணி தட்டிக்கேட்பதும் வழக்கமாம். வழக்கம்போல் நேற்று இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட போது, அங்கு தந்தை அழகர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதால் பாலசுப்பிரமணியாக செய்துகொண்ட தற்கொலையா? அல்லது நாட்டு துப்பாக்கி உடைந்த நிலையில் கிடப்பதால் தந்தையால் சுடப்பட்ட கொலையா? நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 398

0

0