குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்கள்

17 August 2020, 9:04 pm
Quick Share

தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே குடும்ப தகராறில் தந்தையை மகன்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள உசரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் துரை. கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் மனைவி செல்வத்தை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற பிள்ளைகளையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து மனைவி மற்றும் பிள்ளைகள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று மீண்டும் துரை குடிபோதையில் மனைவியிடம் கடுமையான சண்டையில் ஈடுபட்டு அடித்துள்ளார். அப்பொழுது அவரது மகன்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

அதனால் தந்தை மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மகன்கள் கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து துரை என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0