கிரசர் ஆலையில் வெளிவட மாநில மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…

Author: kavin kumar
13 August 2021, 3:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிரசர் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா எருமையூர் பகுதியில் பிருந்தாவன் என்ற எம் சாண்ட் உற்பத்தி செய்யும் கிரசர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் அசிஸ்டன்ட் மிஷின் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகின்றார். அவருடைய பரிந்துரையின் பேரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அபிநய் (வயது 20) என்ற இளைஞர் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார். நேற்று இரவு அபிநய் பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரசாந்த் சாப்பிட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மெஷின் ஆபரேட்டர் கலியபெருமாள் என்பவரும் சற்று தொலைவில் வேறு வேலை செய்து கொண்டிருந்தார்‌.

அபிநய் மட்டும் கன்வேயர் பெல்ட் அருகே வேலை செய்து கொண்டிருந்தார். இவர் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் மோட்டாரில் தூசு அதிகம் படிந்து தண்ணீர் முழுமையாக வெளியே செல்லாததால் மோட்டாரில் பதிந்துள்ள தூசுகளை துடைக்க முயன்றார். அப்போது திடீரென அபிநய் மீது மின்சாரம் தாக்கியதில் நிலைகுலைந்த அவர் கன்வேயர் பெல்ட்க்கு கீழே நீர் தேங்கியுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பிரசாந்த் அபிநய்யை தூக்க முயன்ற போது எலக்ட்ரிக் ஷாக் அடித்ததால் சுதாரித்துக்கொண்டு வெளியே ஓடி சென்று மற்ற ஆட்களை கூப்பிட்டு வந்து மின்சாரத்தை துண்டித்தார்.

நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்திருந்த அபிநய்யை தூக்கி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அபிநய் இறந்து விட்டார் என தெரிவித்தனர். அபிநய்யின் சடலத்தை சோமங்கலம் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றார்கள். விதி வலியது என்பது போல் உத்தரபிரதேசத்தில் இருந்த அபிநய்யை கட்டாயப்படுத்தி பிரசாந்த்தான் வேலைக்கு அழைத்து வந்து சேர்த்துள்ளார். அதை எண்ணி எண்ணி பிரசாந்த் கதறி அழுததை கண்டு உடன் இருந்தவர்களும் கண்கலங்கினார்கள்.

Views: - 139

0

0