மாநிலம் தழுவிய தொடர் கடையடைப்பு போராட்டம்: வணிகர்கள் எச்சரிக்கை
18 September 2020, 5:17 pmபுதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு வசூலிக்கும் சொத்து வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் மாநிலம் தழுவிய தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வணிகர்கள் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்துகள் இயங்கப்படவில்லை இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு பொது போக்குவரத்து அனுமதி வழங்கியதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் முழுமையாக பேருந்து சேவை தொடங்கப்படாததால் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வியாபாரிகள் வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளது இதனால் புதுச்சேரி வர்த்தகம் பெருமளவில் குறைத்துள்ளது.
இதனிடையை புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பில் வியாபரிகள் கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கரன், புதுச்சேரியில் முழுமையாக பேருந்து சேவை தொடங்கப்படாததால் வெளிமாநிலத்தில் இருந்து வியாபாரிகள் புதுச்சேரிக்கு வந்து வியாபாரம் செய்ய முடியவில்லை என்றும் மேலும் பேருந்துகள் வராததால் பேருந்து நிலையத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகவே அரசு இதனை கவனத்தில் கொண்டு விரைவில் மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவையை அரசு தொடங்கவேண்டும் வேண்டும் எனவும், கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசால் வசூலிக்கப்படும் குப்பை வரி, சொத்துவரி, கடை வரி, வணிக வரி உள்ளிட்டவைகளை அரசு ஒராண்டுக்கு ரத்து செய்யவேண்டும் என்றும், இதனை மீறி அரசு வரிகளை வசூலித்தால் மாநிலம் தழுவிய தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.