சிலை கடத்தல் வழக்கு: அக்டோபர் 7 ஆம் தேதி ஒத்திவைப்பு

29 September 2020, 5:30 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இந்தியர் ஜாமீன் கோரிய வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, நியூயார்க் நகரத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிலை கடத்தல் சம்பந்தமாக என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வாழ் குடியுரிமை பெற்று உள்ளேன். இந்த நிலையில் “Art of Past” என்ற தலைப்பில் சிலை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகளை வைக்கப்பட்டதாக தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சொந்த வேலை காரணமாக ஜெர்மனி சென்றிருந்தபோது “Red Corner Notice” மூலம் 2011-ல் ஜெர்மனி காவல்துறையினர் என்னை கைது செய்தனர். 2012 ஆம் ஆண்டு இந்திய காவல் துறையினரிடம் என்னை ஒப்படைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 30 சாட்சியங்களை தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணை செய்துள்ளனர். என் மீது நான்கிற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 71 வயது ஆகிய எனக்கு புற்றுநோயின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 14 நபர்கள் கைது செய்யப்பட்டு என்னைத் தவிர அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 2011 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக. சிறையில் உள்ளார். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பல சிலை கடத்தல் வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இவரை ஜாமின் வழங்கினால், தப்பி சென்று விடுவார். வழக்கு விசாரணை சென்று கொண்டிருக்கிறது என வாதிட்டார். ஏன் இவ்வளவு ஆண்டுகள் சிறையில் வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, இவரது ஜாமின் மனு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.