கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக கூறி போராட்டம்: தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் உறுதி

7 May 2021, 6:54 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து, தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் உறுதி அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் 10, 050 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கபட்ட நோயாளிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையிலேயே சமையல் கூடம் மற்றும் ஊழியர்கள் இருந்தும் இங்கு உணவு தயாரிக்கப் படுவதில்லை. மாறாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தனியார் உணவகங்களில் இருந்து உணவு வாங்கி வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வழங்கபடும் உணவு தரமற்று, அரைகுறையாக சமைத்து வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இன்று வழங்கபட்ட உணவும் தரமற்றதாகவும், முட்டை வேகாமலும் வழங்கபட்டது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் உணவுகளை உட்கொள்ளாமல் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மருத்துவர்கள் உணவை பரிசோதித்துவிட்டு உடனே தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் இனி வரும் காலங்களில் தரமான உணவு வழங்கப்படும் என மருத்துவர்கள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Views: - 38

0

0