கிரைசோபெர்லா இரை விழுங்கி பூச்சியின் முட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

11 November 2020, 9:34 pm
Quick Share

கன்னியாகுமரி: தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை சுருள் பூச்சியை அழிக்கும் கிரைசோபெர்லா இறை விழுங்கி பூச்சியின் முட்டைகள் அகஸ்தீஸ்வரம் வட்டார அரசு வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

குமரிமாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இங்கு தென்னை, நெல், வாழை, ரப்பர் போன்ற விவசாயங்கள் அதிகளவில் செய்யப்படுகிறது. இதனால் இங்கிருந்து அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் மூலப்பொருட்கள் வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தென்னை மரத்தை ரூகோஸ் என்ற வெள்ளை சுருள் பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

இந்த பூச்சி தென்னை மரத்தில் உள்ள ஓலைகளில் படர்ந்து இனப்பெருக்கம் செய்து வேகமாக தென்னை மரம் முழுவதும் பரவி வருகிறது. இது ஓலையில் உள்ள சத்துக்களை உறிஞ்சி கருமையான மெழுகு போன்ற திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த தேன் போன்ற திரவம் தென்னைமர ஓலையின் மேல் பகுதிகளில் படர்ந்துவிடுவதால் அதன் மீது கருமை நிறத்தில் பூஞ்சை போன்றவை வளர்ந்து தென்னை மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் சத்து இல்லாமல் தேங்காயின் தரம் மற்றும் அளவு குறைவதுடன் அந்த தென்னை மரத்தின் மகசூலும் குறைந்து விடுகின்றது.

இதனை தடுக்க மரங்களில் மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்டியும், மஞ்சள் நிற துணிகளை கட்டியும் ஓலைகளில் தண்ணீரை வேகமாக பீச்சி அடித்தும், வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து தெளித்தும் வந்தனர். ஆனால் இதில் பெருமளவு பயன் கிடைக்கவில்லை. வெள்ளைப் பூச்சியை உண்ணும் கிரைசோபெர்லா என்ற இரை விழுங்கி பூச்சியின் முட்டைகளை விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்தாமரைகுளம் புவியூர், கோவில்விளை, முகிலன்குடியிருப்பு பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் வட்டார அரசு வேளாண்மை துறை சார்பில் 3 நாட்களில் பொரிக்கும் கிரைசோபெர்லா பூச்சியின் முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை துறை இயக்குனர் சுரேஷ் தலைமை வகித்தார். உதவி வேலாண்துறை அலுவலர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அப்துல் ரசாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இதற்கான விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். இதுகுறித்து அப்துல் ரசாக் விவசாயிகளிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்திவரும் இந்த வெள்ளை பூச்சிகளை தின்று அழிக்கும் கிரைசோபெர்லா பூச்சியின் முட்டை உள்ள தாள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை வெட்டி வெள்ளை பூச்சி படர்ந்துள்ள ஓலைகளில் ஸ்டாப்லர் பின் கொண்டு பின் செய்து வைத்தால் மூன்று நாட்களில் இந்த முட்டைகள் பொரித்து இந்த இரைவிழுங்கி பூச்சிகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்ய துவங்கிவிடும் இதனால் இங்கு உள்ள வெள்ளை பூச்சிகள் அழிக்கப்படும். இதனை நீங்கள் உங்கள் தென்னந்தோப்புகளில் வளர்க்கலாம் என்றார். மேலும் வெள்ளை பூச்சிகளைத் தின்று அளிக்கும் என்கார்சியா என்ற ஒட்டுண்ணியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் தோட்டங்கள் மற்றும் வயலில் வளர்க்கலாம்.

இதற்காக பெட்டி போன்ற அமைப்பை எங்கள் வேளாண் கல்லூரி மூலம் பல ஆராய்ச்சிகள் நடத்தி தயாரித்துள்ளோம். இதற்கான களஆய்வுகள் தற்போது பல தோட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதன் பலன் விரைவில் நமக்கு தெரியவரும் என்றார். இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் காருண்யா வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களும் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Views: - 28

0

0