திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் எனஅறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு…

18 August 2020, 9:24 pm
Quick Share

திருச்சி: திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் என்று அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார்.

திருச்சியில் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த இரு தினங்களாக மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் இரண்டு பேர் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்கும் செய்யும் துரோகம் மட்டும் கிடையாது. மறைந்த தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளாகும். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை சுற்றி டெல்டா மாவட்டங்கள் உள்ளது. திருச்சிக்கு சாபக்கேடு போல் ஏற்கனவே வந்த உயர்நீதிமன்ற கிளை மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை சேலம், மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அதேபோல் திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மாயவரம் வரை நீட்டிக்கப்பட்டது.

கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே தற்போது மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து திருச்சிக்கான பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் தான் ஜாதி, மத கலவரங்கள் ஏதுமில்லாத அமைதியான மாவட்டமாகும். திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு 5 மணி நேரத்தில் சென்றடைந்து விடலாம். எம்ஜிஆர் நல்ல உடல் நிலையுடன் இருந்திருந்தால் இந்நேரம் திருச்சி இரண்டாவது தலைநகரமாக ஆகியிருக்கும். திருச்சியை அனைவரும் கை விடும் சூழ்நிலை உள்ளது. கொரோனா பாதித்துள்ள தற்போதைய நிலையில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். இதற்காக திருச்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஜாதிச் சங்கங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் குழு அமைக்கப்படும். தேர்தல் அறிக்கையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் என்று அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். திருச்சியில் உள்ள அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் இதற்கு பதில் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.