எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு…! வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் பேட்டி

Author: Udayaraman
30 December 2020, 11:26 pm
Quick Share

வேலூர்: வரும் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வியாபாரிகள் இருப்பார்கள் என்றும், எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு என வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் வணிகர் சங்க பேரமைப்பு கொடியை ஏற்றிவைத்து வணிகர்களிடம் கொரோனா கால சூழல் குறித்து வியாபாரிகளுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- கொரோனா தொற்று பேரிடர் காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வணிகர்களை சந்தித்து வணிகர்களின் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வு மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்பட்டு கொரோனா பேரிடர் காலத்திலே பாதிப்புகளை சரி செய்யும் சூழலை உறுவாக்க பேரமைப்பு வழிவகை செய்யும்.

கொரோனா காலத்தில் வணிகர்களின் 6 மாத கால வட்டியை அரசு ரத்து செய்ய வேண்டும், உள்ளாட்சி, நகராட்சி கடைகளின் 6 மாத கால வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசு 2 மாத வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வர் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பை துச்சமென நினைத்து வேலூர் மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டேம் என கூறுகிறார். இது போன்ற அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாமல் 2 மாத வாடகையை தள்ளுபடி செய்து மீத வாடகையை வசூலிக்க வேண்டும். வேலூரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமை அடையாமல் உள்ளது.

இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிகக்கப்பட்டுள்ளனர். அரசு போர்க்கால அடிப்படையில் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பெயர் பலகையில் 10% இடத்தில் 5% இடம் தமிழில் எழுத வேண்டும், தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதை சுற்றரிக்கையாகவும் தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளோம். வணிகர்கள் GST கட்டுவதில் அதிக குளறுபடி உள்ளது அதை அகற்றினால் தான் முறையாக GST கட்டுபவர்கள் தொடர்ந்து கட்ட முடியும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நாங்கள் அழுத்தம் தர உள்ளோம்.

இன்னும் 6 மாத காலத்திற்க்கு அரசு துறை அதிகாரிகள் வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைப்போ, கடைக்கு சென்று வியாபாரிகளுக்கு அபராதமோ, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் லஞ்சம் வாங்குவது போன்ற செயலிலே ஈடுபடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டிக்கொள்கிறோம். வியாபாரிகளின் வாக்கு வங்கி ஒரு பெரும்பாலான வாக்கு வங்கி என்பதை தமிழக அரசுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிறுபித்துக்கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் வியாபாரிகளை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்டிக்கொண்டிருக்கிறோம்.

வாக்குகளை ஒன்றுபடுத்திக்கொண்டிருக்கிறோம். எங்கள் வாக்குகள் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வியாபாரிகள் இருப்பார்கள். எங்கள் ஆட்சிமன்ற குழு கூட்டப்பட்டு எங்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக தர இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்று கட்டாயம் நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு இருக்கும். தேர்தல் அறிவித்த பிறகு இதை செய்வோம். அரசு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்துள்ளது.

அந்த வகையில் அரசு, கொரோனா காலத்தில் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் வகையில் 6 மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 3 வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு எங்கள் வணிகர் சங்கம் எப்போதும் தார்மீக ஆதரவை அளித்திருக்கிறது. 3 வேளாண் சட்ட திருத்ததை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பாரத பிரதமர் விவசாயிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 96

0

0