சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

22 January 2021, 9:03 pm
Quick Share

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு இன்று வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 15-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளான இன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பும், அய்யாவுக்கு பணிவிடையும் மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளும் காட்சியும் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு முத்து குடைகள், மேளதாளங்கள் முன்னே செல்ல அய்யா கலி வேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். தொடர்ந்து குதிரை வாகனம் தலைமைப் பதியை சுற்றிவந்து, நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையில் திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டயடி புதூர், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய ஊர்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று அருள் பாலித்தார். வாகனம் செல்லும் இடங்களில் அந்த கிராமப்பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து சுருள் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து இரவு 10 மணி அளவில் தலைமைபதியை வந்தடைந்தது.

இரவு 11 மணிக்கு அய்யா தலைமைப் பதாயின் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு அவ கூட காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுக படிப்பும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. கலி வேட்டை நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 25 -ம் தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை-மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

Views: - 0

0

0