நங்காநல்லூர் கூட்டுறவு டெண்டர் ஊழல் விவகாரம் : தி.மு.க., எம்.பி. ஆர்.எஸ். பாரதியிடம் இழப்பீட்டு தொகையை வசூலிக்க உத்தரவு

5 September 2020, 11:16 am
rs bharathi - updatenews360
Quick Share

நங்காநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற டெண்டர் ஊழல் தொடர்பாக தி.மு.க. எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி உள்பட 10 பேரிடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நங்காநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் ஆர்.எஸ். பாரதி தலைவராக இருந்த போது நடந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாக தற்போதுள்ள தலைவர் வெ.பரணி பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக வீட்டுவசதித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், நங்காநல்லூர் கூட்டுறவு கட்டிடம் ரூ.49,64,579 செலவு செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் அனுமதியளித்த தொகையை விட, ரூ.7,64,577 கூடுதலாக செலவு செய்து அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது தெரிய வந்தது.

மேலும், இந்த வணிக வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து முறைகளும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் நிபந்தனைகளை மீறி மேற்கொள்ளப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை மேற்கோள் காட்டி தி.மு.க., எம்.பி. ஆர்.எஸ். பாரதி உள்பட 10 பேர் மீது நிரந்தர தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு துணைப்பதிவாளர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையின் மீது 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இழப்பீடுத் தொகையை வசூலிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதன்மூலம், தி.மு.க., எம்.பி. ஆர்.எஸ். பாரதி, இனி எந்த கூட்டுறவு சங்கங்களிலும் உறுப்பினராக முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0