உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி காதல் ஜோடி மனு

4 September 2020, 6:14 pm
Quick Share

திருச்சி: காதல் திருமணம் செய்த தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோரி திருச்சி மாவட்ட எஸ்பியிடம் காதல் ஜோடி மனு வழங்கினர்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் தலைமையில் இன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருவெறும்பூர் பங்காரு அடிகளார் நகரை சேர்ந்த மணிசெல்வம் இவரது மனைவி சௌமியா ஆகியோர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- செளமியா என்னும் நான் எனது கணவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தேன். கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள
சோழமா நகர் பகுதியிலுள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமணம் செய்துகொண்டு பின்னர் திருவரம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.

தற்போது நான் எனது கணவர் மணிசெல்வம் மற்றும் மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறேன். எனது திருமணத்தில் பெற்றோர் விருப்பம் இல்லாததால் எங்களை தொடர்ந்து பிரித்து விடுவதாக மிரட்டி வந்தனர். இதுகுறித்து திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில், எனக்கும் எனது கணவர் மணிசெல்வத்திற்கும் எந்தவித இடையூறும், பிரச்சனை செய்யக்கூடாது எனவும், முறைப்படி நாங்கள் திருமணம்
செய்து கொண்டதால் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யகூடாது என கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் திரூவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வாளராக பணி செய்யும் எனது தந்தை நடராஜன், தாயார் அஞ்சலை, சித்தப்பா வழக்கறிஞர் அழகர்சாமி மற்றும் அத்தை லட்சுமி ஆகியோர் என்னை என் கணவரிடமிருந்து பிரித்து அத்தை லட்சுமியின் மகன் மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர். அதற்கு நான் மறுத்துவிடவே கடந்த இரு தினங்களாக என்னை காரில் கடத்தி செல்ல முயற்சித்தனர்.

மேலும் எனது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க கூலிப்படையினர் துணைகொண்டு மிரட்டி வருகின்றனர். எனவே மேற்கண்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து எனது மணவாழ்க்கைக்கு பாதுகாப்பும் எனது கணவர் உயிருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறை கண்காணிப்பாளா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0