மூர்க்கமாக தாக்கிய கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்

Author: Udhayakumar Raman
27 October 2021, 8:46 pm
Quick Share

கோவை: கோவையில் மூர்க்கமாக தாக்கிய கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்பு நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது .

மேட்டுப்பாளையம் அடுத்த குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமராஜ் மனைவி மற்றும் பெற்றோருடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார் . இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாட்டு நாயொன்றை வளர்த்து வருகிறார் . இந்நிலையில் ராமராஜன் விவசாய பணியை மேற்கொண்டிருந்த போது , வனப் பகுதியில் இருந்து வந்த கரடியொன்று அவரை தாக்க துவங்கியது.தடுமாறி கீழே விழுந்த ராமராஜனை மூர்க்கத்தனமாக நகத்தால் கீறியபடி கழுத்துப் பகுதியை கடித்து குதற முயன்றது கரடி . கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்ட ராமராஜன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடினார்.

அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த பப்பி , தனது எஜமானரை காப்பாற்றும் நோக்கில் கரடிக்கு மிக அருகில் சென்று விடாமல் குரைக்க துவங்கியதோடு ஒரு கட்டத்தில் கரடியை கோபத்துடன் கடிக்க துவங்கியது . நாயின் இச்செயலால் அச்சமடைந்த கரடி வேறு வழியின்றி ராமராஜனை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது. இதற்குள் நாயின் தொடர் சத்தத்தை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ள தோட்டத்தினர் விரைந்து வந்து காயமடைத்த ராமராஜனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் .

கரடி கடித்ததில் காயமடைந்த ராமராஜனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர் . இந்நிலையில் பப்பி இல்லை என்றால் ராமராஜன் இறந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Views: - 92

0

0