மாற்றம் தரும் மூத்த தேவி

23 November 2020, 5:00 am
Quick Share

நம்மால் வெறுக்கப்பட்ட மூதேவி என்பவள் யார். நம் வழிப்பாட்டு முறையில் மிகப்பெரும் மாற்றங்களை சமீபகாலங்களில் பின்பற்றி வருகிறோம். அதற்கு மிக சிறந்த உதாரணம், மூதேவி வழிபாடு. அவள் ஸ்ரீ தேவியின் அக்காள் எனவும் புராணக்கதைகளில் ஸ்ரீ தேவி வந்தால் அழகு, மூதேவி போனால் அழகு என்று ஒரு கதை சொல்லப்பட்டு, மூதேவியை விளங்க விடாத தெய்வமாக ஆக்கப்பட்டு வடமொழி நூல்கள் விரித்துரைக்கின்றனர்.

மூதேவியை பற்றிச் சொல்லும் போது அவள் சோம்பேறி எதற்கும் உதவாதவன் விளங்காதவன் என பொருள் கொள்ளப்படுகிறது. இது வடவர்களின் சூழ்ச்சி தான். உண்மையில் மூதேவி என்றால் யார். அத்தெய்வத்தை யார் வணங்கி வந்தனர் என்றால் இப்போது வழிபடும் மரபை சேர்ந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. மூதேவி என்றால் மூத்த தேவி என்று பொருள்படும். அவளுக்கு தவ்வை, சேட்டை, கேட்டை, மா முகடி, என மொத்தம் 16 தமிழ் பெயர்களில் வழங்கப்பட்ட மூத்த தெய்வமாகும்.

இது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. மூத்ததேவி என்கிற மூதேவி மண்ணுக்கு வளம் சேர்க்கும் உரத்தின் அடையாளமாக இருப்பவள். உரத்தின் வளத்தை உறிஞ்சிய நெற்பயிரின் கதிர்தான் ஸ்ரீதேவியின் அடையாளமாகும். கதிர் மணிக்கு உரம் அவசியம். அதனால் வயல் வெளிகளில் கற்சிற்பமாக இன்றும் தமிழகம் முழுதும் விரவிக்கிடக்கின்றன.

பழந்தமிழர்களின் வழிபாட்டு முறையை இயற்கையொட்டியே அமைந்திருக்கும். தமிழ் இலக்கியங்களில் வெகுவாக பாடப்பட்ட கொற்றவை எனும் தெய்வம் தமிழர்களின் தாய் தெய்வமாகும். அதற்கு அடுத்து இலக்கியங்களில் அதிகம் காணப்படும் பெயர் தவ்வை என்னும் இந்த தமிழர்களின் மூத்த தெய்வம் தான் வெகுவாக அழைக்கப்பட்டுள்ளது. இது உழவர்களின் தெய்வம். தமிழ் உழவர்கள் அறிவு சார்ந்து உருவாக்கப்பட்ட மூதேவியை வடம் மொழி நூல்கள் அமங்கலத்தின் அடையாளமாக கூறி இழிவாக்கினர்.

வளத்தின் தெய்வமான தவ்வையையை விள்ங்காதவள் என வடவர்கள் இழிவாக்கினர். வேளான் குடியெனும் அனைத்து உழவுத் தொழில் சார்ந்த குடிமக்களாய் எட்டாம் நூற்றாண்டு வரை திகழ்ந்த மூதேவி அதன் பிந்தைய ஆரிய கலப்பினால் திரித்துக் கூறி தங்களுடைய ஸ்ரீதேவியை முன்னிலைப் படுத்தினர்.
உண்மையில் மூதேவி தான் செல்வத்தின் தேவதையென வழிபட்டு வரப்பட்டுள்ளது.

காஞ்சி கைலாசக்கோவில், திருவானைக்காவல், வழுவூர் ஆகிய கோவில்களில் தவ்வைக்கு தனி சன்னதி உண்டு. திருச்சி குளித்தலை, மோகனூர், முக்கூடலூர், பெரமநல்லூர் ஆகிய கோவில்களில் திருச்சுற்றில் தவ்வை எனும் தெய்வம் செதுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் குடைவரைக் கோவிலாய் உள்ளது. உத்திர மேரூரில் உள்ள கோவிலில் அழுக்கான தெய்வமாக தரையில் சாற்றி வைக்கப்பட்டுள்ளது.

ஏழுகன்னியரில் ஒருவராய் தவ்வை இன்றும் வணங்கப்பட்டு வந்துள்ளது. குழந்தைப் பேறற்றவர்களுக்கு வரம் தரும் தேவியாய் வழிபடுகின்றனர். எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களின் காலத்தில் உழவர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டுள்ளது. மாமுகடி எனும் பெயரில் அவ்வையும் தவ்வை எனும் பெயரில் திருவள்ளுவரும் குறிப்பிடுகின்றனர்.

மூதேவியின் கைகளில் முறமும் விதை நெல்லும் வைத்து புடைப்பது போல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பழனி அருகே கிடைத்த சிற்பமாகும்.எங்கெல்லாம் வேளாண்மை செழித்து வளர்ந்தனவோ அங்கெல்லாம் இச்சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. எட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய ஆய்வுகளில் இம்மூதேவி இழி நிலைக்குத் தள்ளப்பட்ட தெய்வமாக உள்ளது. கவனிக்க வேண்டிய கடவுள் விசயம் என்பது மட்டும் நிஜமான உண்மை.

Views: - 1

0

0