தேங்கியுள்ள கழிவுநீரை நேரடியாக களத்தில் நின்று அகற்றிய சட்டமன்ற உறுப்பினர்

15 January 2021, 5:36 pm
Quick Share

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் 26வது வார்டு பகுதிகளில், சமீபத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் அந்த பகுதி முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி காணப்பட்டது. இதனால், சுகாதாரக் கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் உடனடியாக அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றும் வரை அங்கே அமர்ந்து பார்வையிட்டு வருகிறார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 100 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. இது மாவட்டத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் மழை நீர் வெளியேற வழியில்லாததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் வண்டிக்காரர் தெரு 26வது வார்டு பகுதியில் பல நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் நகராட்சி கோரிக்கை வைத்தும் அதனை அகற்றாத நிலையில், இன்று அந்த பகுதிக்கு வந்து எம் எல் ஏ மணிகண்டனிடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான மணிகண்டன் அந்த பகுதியில் அமர்ந்து அதிகாரிகளை வரவழைத்து கழிவுநீர் அகற்றும் வரை அங்கேயே அமர்ந்து அந்தப் பணியை பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த உத்தரவு நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Views: - 4

0

0