வேலைக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்: நூற்பாலை முன்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டம்

9 May 2021, 7:57 pm
Quick Share

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே நூற்பாலை வேலைக்கு சென்ற 17 வயது சிறுமி மாயமானதால் நூற்பாலை முன்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் முடுக்குப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா-மூக்காயி தம்பதிகளுடைய மகள் கோகிலா என்ற 17 வயதுடைய சிறுமி. கொரோனா நோய்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் சிறுமியை வடமதுரை அருகே உள்ள நூற்பாலையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். நூற்பாலையில் உள்ள விடுதியில் தங்கி கோகிலா வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நேற்று அவரது பெற்றோர் நூற்பாலை சென்றுள்ளனர். அப்போது நூற்பாலை நிர்வாகத்தினர் கடந்த இரண்டு தினங்களாக சிறுமியை காணவில்லை என்று கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து காணாமல் போன மகளை மீட்டுத் தரக் கோரி வடமதுரை காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தும் போலீசார் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகிலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை காவல் ஆய்வாளர் சுரேஷ் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காணமல் போன சிறுமியை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 40

0

0