திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குகளை சேகரித்த மின்சாரத் துறை அமைச்சர்

Author: kavin kumar
28 September 2021, 9:46 pm
Quick Share

கரூர்: கரூரில் திமுக வேட்பாளர் கண்ணையனை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்து வைத்து வாக்குகளை சேகரித்தார்.

கரூர் மாவட்டம் ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் இடைத் தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அக்கட்சியினர் 8 ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது வேட்பாளர் கண்ணையனை அறிமுகம் செய்து வைத்து பேசினார், நம் மாவட்டத்தில் உள்ள இந்த 8வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்ற வாக்குறுதியை அளிப்பதாக தெரிவித்தார்.

பின்னர், வெள்ளியணை கடைவீதி பகுதியில் கடை, கடையாக நடந்து சென்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வாக்குகளை சேகரித்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடைக்காரர் தனது கடைக்கு வந்த அமைச்சரை வரவழைத்து அமர வைத்து டீக்குடிக்க வைத்து அனுப்பி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலரும் முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளியும் கடை பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணையன் மகத்தான வெற்றி பெறுவார். 4 மாத கால ஆட்சியில் கரூர் மாவட்டத்திற்கு என்று 2000 கோடி ரூபாய்கான வளர்ச்சி திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.

இடைத்தேர்தல் நடைக்கின்ற இந்த 8 ஊராட்சிகளில் சாலைகள், சாக்கடைகள் கட்ட என அடிப்படை வசதிகளை மேம்படுத்த 10 கோடியே 71 லட்சம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்ன தேவைகள் என்பதை அறிந்து நிதிகள் பெற்று வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ள தலைவர்கள், உறுப்பினர்களுக்கு பதவி காலம் இன்னும் இருக்கிறது. அது முடியும் தருவாயில் அவை தரம் உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். வெள்ளியணை பகுதியில் இருந்து பொதுமக்கள் யாரும் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை. அக்கோரிக்கை எழும்பட்சத்தில் முதல்வரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்கின்ற அறிவிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு பெறப்பட்டு கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதற்கான அரசாணையை முதல்வர் வெளியிடுவார் என்றார்.

Views: - 410

0

0