இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கொலை: உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்…
17 August 2020, 10:18 pmகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கொலை செய்யப்பட்டு உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசப்பட்டு தற்போது சடலமாக மீட்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதாப் என்கின்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர் ஒரகடம் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்ததுத், இவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக ஒரகடம் காவல் நிலையத்தில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் நண்பனின் மனைவி குறித்து பிரதாப் தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த பிரதாப்பின் நண்பர்கள் மூன்று பேர் இணைந்து பிரதாப்பின் தலையை தனியாக வெட்டி உடலையும் தலையையும் வடக்குபட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி தூக்கி வீசிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கிணற்றில் உள்ள நீரினை தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெளியேற்றி பிரதாப்பின் உடல் மற்றும் தலையை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிரதாப்பின் நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.