பேருந்தில் தம்பதிகளிடம் இருந்து பணம், நகைகளை அபேஸ் செய்த நபர்
Author: kavin kumar21 August 2021, 2:29 pm
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் போலீஸ் பூத் அருகே சேலம் செல்லும் பேருந்தில் ஏறிய தம்பதிகளிடம் இருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் திருமண முகூர்த்த தினத்தியொட்டி, நேற்று அதிகாலை முதலே காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல கூடியிருந்த மக்களை கட்டுபடுத்த போதுமான காவலர்கள் இல்லை. இதனை சாதமாக்கிய திருடர்கள் தங்கள் முகங்களை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்த உடையில் இருப்பவர்களை திடீரென யாரும் சந்தேகித்து விசாரணை நடத்த முடியாது. மேலும் இவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என தெரியாது. சந்தேகம் கொண்டு உடை அகற்ற கூறினால் மதம் சார்ந்த அடிப்படையில் பிரச்சினைகள் உருவாகும். இதை கருத்தில் கொண்டே இந்த நூதன முறையினை கையாளுகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சுமதி சுமன் என்ற தம்பதிகள் தனது உறவினர் திருமணத்திற்கு காஞ்சிபுரம் வந்துவிட்டு பிற்பகல் ஒரு மணியளவில் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக சேலம் அரசு பேருந்தில் ஏற முற்பட்டபோது, பின்னால் வந்த பர்தா அணிந்த நபர் சுமதி மீது இடித்தபடியே சென்றுள்ளார். சுமதி சுமன் பேருந்தில் அமர்ந்து தங்கள் பையை பார்த்தபோது தனது பைக்குள் வைத்திருந்த கம்மல் , மாட்டி, சுட்டி போன்ற தங்க நகைகள் மற்றும் பணம் என சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இது குறித்து புகார் தெரிவிக்க காவல் பூத்துக்கு சென்று பார்த்தபோது காவலர்கள் யாரும் இல்லாததும், பூத் சில மாதங்களாக பூட்டி தான் உள்ளதாகவும் அருகில் இருந்தவர்கள் கூறியதால் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பர்தா நபரை தேடி வருகின்றார்கள்.சுற்றுலாதளம் என பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அடிக்கடி திருட்டு வழிப்பறி போன்றவை நடக்கின்றது என்றும் கண்காணிப்பு கேமரா அமைத்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
0
0