வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள் என கூறி விற்பனை செய்த நபர் கைது
Author: kavin kumar18 August 2021, 5:54 pm
சென்னை: வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள் என்று கூறி விற்பனை செய்து வந்த கும்பகோணத்தை சேர்ந்த நபர் கொடுங்கையூரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் வெளியூரிலிருந்து வந்து போதை மாத்திரைகளை மர்ம நபர் ஒருவர் விற்று வருவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மூலக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரொருவரை கொடுங்கையூர் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது வலி நிவாரண மாத்திரைகள் 300 இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் திருச்சி மாத்தூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்த சுபாஷ் வயது 19 என்பதும்,
இவர் அப்பகுதியில் உள்ள மருந்தகங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை வடசென்னையில் உள்ள பலருக்கும் போதை மாத்திரைகள் என்று கூறி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 15 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை 150 ரூபாய்க்கு வாங்கி அதை ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சுபாஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த வலிநிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த மாத்திரைகளை சுபாஷ் யார் யாருக்கு விற்று வந்தார் என்ற கோணத்தில் கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0