கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
Author: kavin kumar19 January 2022, 6:44 pm
தருமபுரி: போசிநாயக்கனஅள்ளி உள்பட 8 கிராமங்களில் வீட்டு மனைப்பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் ஒசஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட போசிநாயக்கனஅள்ளி, ஒசஅள்ளி, வேடியூர் , பாசாரப்பட்டி உள்ளிட்ட 8 குக்கிராமங்களில் சுமார் ஆயிரத்து 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,
ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காடு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி போசிநாய்கனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சுவார்ததை நடத்தி தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கோஷமிட்டு முற்றுகையில் ஈடுபட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு போராட்டத்தை கலைத்தனர்.
0
0