கொரோனா அச்சமின்றி திண்டுக்கல் மார்க்கெட் பகுதியில் குவிந்த பொதுமக்கள்

15 May 2021, 3:32 pm
Quick Share

திண்டுக்கல்: அச்சமின்றி திண்டுக்கல் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

கொரோனா இரண்டாவது அலை படு தீவிரமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே தமிழக அரசு மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நண்பகல் 12 மணிவரை கொடுக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வினை காலை 10 மணியாக குறைத்துள்ளது.

இதன் காரணமாக திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டும் தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் பூ மார்க்கெட் எதிர்ப்புறம் உள்ள சாலை மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்து. மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் நோய் தொற்று குறித்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு அளித்த போதும் பொதுமக்கள் யாரும் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

பொதுமக்கள் சிரமம் அடையக்கூடாது என்ற நல்ல நோக்கில் அரசு ஊரடங்கில் சற்று தளர்வு கொடுத்துள்ளது. ஆனால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொதுமக்கள் நோய்த்தொற்று அச்சமின்றி தெருக்களில் சுற்றித் திரிந்து மற்றவர்களுக்கும் வைரஸ் தொற்றினை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 39

0

0