பொதுமக்கள் நிரந்தர பாதுகாப்புக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

3 July 2021, 4:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: தமிழகத்தில் பலர் மாஸ்க் அணியாமல் உள்ளார்கள், தற்காலிக பாதுகாப்புக்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும், நிரந்தர பாதுகாப்புக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கும், சங்கரமடத்திற்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த சிறப்பு யாக நிகழ்விலும் ஆளுநர் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;- தற்காலிக பாதுகாப்புக்கு முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பின்பற்றுங்கள். நிரந்தர பாதுகாப்புக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் பலர் மாஸ்க் அணியாமல் உள்ளார்கள்.

அனைவருமே தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே எனது அன்பு வேண்டுகோள். நான் அடிக்கடி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளவர். தமிழகத்தில் அனைத்து கோவில்களும் எப்போது திறக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். பொதுமுடக்கத்தின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் திறந்தவுடன் முதல்முறையாக காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளேன். எனக்கு மிகவும் விருப்பமான தெய்வம் காஞ்சி காமாட்சி அம்மன். மூன்றாவது அலை வந்து விடவே கூடாது, எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டேன்.

கோவிலுக்கு செல்பவர்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது கூட முகக் கவசத்தை கழட்டாமல் இறைவனை வணங்குங்கள் .முகக்கவசத்தை எடுக்காமல் இறைவனை வணங்கினால் தான் நிரந்தரமாக முகக்கவசம் போடாத ஒரு சூழல் வரும். பாண்டிச்சேரி மக்கள் 45 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என தெரிவித்தார். கொரோனா காலகட்டங்களில் பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாமல் வருபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு உயிர் கவசம் ஹெல்மெட் அவற்றை நம்ம தலையை நாம் தான் காப்பாற்றனும் காவல்துறை அபராதம் விதித்து காப்பாற்றக் கூடாது எனவும் தெரிவித்தார்.

Views: - 65

0

0