ஸ்டெர்லைட் ஆலை மீதான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு: ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பேட்டி…

22 August 2020, 10:17 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக 10 ஆயிரம் பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் நிர்வாகிகள் பேசியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் மூலமாக ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி நிரந்தர தொழிலாளர்கள், மறைமுக தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்பட 10,000 பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்பு அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்படி யாருக்கும் எவ்வித வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரியவில்லை. குறிப்பிட்ட காரணத்துக்காக தொழிற்சாலையை மையப்படுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தினால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.  எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்ல ஆயத்தமாகி உள்ளோம் என்றனர்.