காதல் விவகாரத்தில் இளைஞர் வீட்டை சேதப்படுத்திய பெண் வீட்டார்| நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க கோரிக்கை

6 November 2020, 9:52 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதல் விவகாரத்தில் இளைஞரின் வீட்டை சேதப்படுத்திய பெண் வீட்டார் மீது
நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க இளைஞரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்ணீர் பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பூபதி (22). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் காயத்ரி (20) என்பவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதையறிந்த பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர், பூபதியை கண்டித்துள்ளனர்.  மேலும், காயத்ரிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காயத்ரியும், பூபதியும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெருமாள், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன்  சேர்ந்து, பூபதியின் வீட்டில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஜன்னல்களையும்,

அங்கிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் இரும்புக் கம்பி மற்றும் உருட்டுக்கட்டை ஆகியவற்றால்  அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பூபதியின் தந்தை ராஜா, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், காயத்ரியின் குடும்பத்தினர்  பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள ராஜா, இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், காதல் விவகாரம் தொடர்பாக தனது வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 16

0

0