திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

2 March 2021, 3:46 pm
Quick Share

திருவாரூர்: ஆசியாவின் பிரமாண்ட தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் சர்வ தோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிக பிரமாண்ட தேராக கருதப்படுகிறது. 96 அடி உயரமும் 400 டன் எடையும் இதன் தனி சிறப்பாகும். சிறப்புமிக்க ஆழித் தேரோட்ட திருவிழா திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதலில் கொடிமரத்திற்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புனித கொடிக்கு தீபாராதனை காட்டப்பட்டு மங்கல வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது ஆரூரா தியாகேசா என ஏராளமான பக்தர்கள் முழங்கி மலர்களை தூவி வழிபாடு செய்தனர். ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0