தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.86 லட்சம் அபராதமாக வசூல்

16 May 2021, 6:58 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.86 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலும் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிப்பதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு சமயத்தில் அத்துமீறி வெளியே சுற்றுபவர்கள் எச்சரிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் இன்று நடைபெற்ற வாகன தணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்பொழுது தேவையின்றி வெளியில் சுற்றுவதாக பிடிபட்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்‌.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் அறிவிப்புபடி தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாகனத்தில் தேவையில்லாமல் ஊர்சுற்றுவதை தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் வாகன சோதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் காவல் துணை சரகங்கள் ஒவ்வொன்றிலும் ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் வருடங்கள் விதிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அவசியம் இன்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி அபராதம் விதிக்கப்படும். இதுவரை ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டது தொடர்பாக 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 10ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக காவல் துறையின் சார்பில் 86 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Views: - 51

0

0