சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மீது போலீசார் தடியடி

24 August 2020, 4:37 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் காவல் நிலையத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பத்துகண்ணு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாமக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் ரெட்டியார் பகுதியில் உள்ள தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விறபனை நிலையத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தின் உதவியுடன் தவணை முறையில் வீட்டு உபயோக பொருள் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக மாதந்தோறும் தவணையை வங்கி பரிவர்த்தனை முலம் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த மாதம் ஊரடங்கு காரணமாக வங்கியில் தவணை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அந்த நிதி நிறுவனத்தின் பணம் சேகரிக்கும் ஊழியரிடம் அபாரத தொகையுடன் தவணையை செலுத்தி உள்ளார். ஆனால் அடுத்த இரு தினங்களில் அவர் வங்கி கணக்கில் இருந்து அந்த நிதி நிறுவனம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். பணம் செலுத்தியும் மீண்டும் தன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இது குறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையை இதுகுறித்து மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது காவல்கண்காணிப்பாளர் புகார் கொடுக்க இருவர் மட்டும் போதும் கொரோனா நேரத்தில் இவ்வளவு பேர் கூட்டமாக வராதீர்கள் என கூறியுள்ளார்.

அப்போது அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாமகவினர் 30க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாததால் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர்.

Views: - 27

0

0