டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டலுக்குள் புகுந்த பேருந்து: 2 பேர் படுகாயம்

Author: Udhayakumar Raman
2 August 2021, 3:32 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஹோட்டலுக்குள் புகுந்ததில் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாத்தூரிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் ஊருக்குள் வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஹோட்டலுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஹோட்டல் முழுவதும் சேதமானதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனமும் சேதமானது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஹோட்டலுக்குள் புகுந்ததில் ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் பேருந்தின் அடியில் சிக்கி கேஸ் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனால் உடனடியாக அங்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பகல் வேளையில் ஹோட்டலுக்குள் புகுந்து தனியார் பேருந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 120

0

0