ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் போராட்டம்.!!

17 August 2020, 6:47 pm
Tirupur Protest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே குடிநீர் வழங்காத பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்டது நடுவேலம்பாளையம் கிராமம்.இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இன்று குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் பூமலூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில் குடிநீர் வராமல் இருப்பதால் வெளியில் சென்றும் குடிநீர் எடுக்க முடியாத சூழல் உள்ளதாக பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.