மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த திருநங்கைகள்: வாழ வழி இல்லாததால் கருணைக் கொலை செய்ய கோரிக்கை

Author: Udhayakumar Raman
2 August 2021, 8:29 pm
Quick Share

சேலம்: தங்களை வாழவிடாமல் அடித்து வரும் ஒரு பிரிவை சேர்ந்த திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் 400க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை திருநங்கை ஒருவர் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக புதிய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது இன்னொரு பிரிவை சேர்ந்த திருநங்கைகள் புதிய பேருந்து நிலையம் செல்வதாக இருந்தாலும், வேறு எங்கு செல்வதாக இருந்தாலும் மாதம் மாதம் 5000 ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி நடைபெற்று உள்ளது. இதனை அறிந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் இரண்டு திருநங்கைகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் ஏராளமானோர் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை வாங்கிக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திருநங்கைகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம் டவுன் உதவி ஆணையாளர் வெங்கடேஷ் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருநங்கைகள் உதவி ஆணையாளர் காலில் விழுந்து எங்களை வாழவிடுங்கள் என கோரிக்கை வைத்தனர். அப்பொழுது இரண்டு திருநங்கைகள் திடீரென மயக்கம் அடைந்ததால் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு தீர்வு காணப்படும் என உதவி ஆணையாளர் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ஒரு பிரிவை சேர்ந்த திருநங்கைகள் எங்களை வாழ விடாமல் துன்புறுத்தி வருவதாகவும், அடித்து மிரட்டுவதாகவும் தெரிவித்தனர். எங்களைப் போன்றவர்களை வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும், இல்லையேல் எங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

Views: - 151

0

0