தொழில் அதிபர் திவான் அக்பர் கடத்தப்பட்ட வழக்கு: தவ்ஃபீக்கின் மனைவி சல்மா திருச்சியில் கைது…

27 August 2020, 7:59 pm
Quick Share

திருச்சி: ரூ.2 கோடி பணம் கேட்டு சென்னை தொழில் அதிபர் திவான் அக்பர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிராம்பட்டினத்தை சேர்ந்த தவ்ஃபிக் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த தவ்ஃபீக்கின் மனைவி சல்மா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் திவான் அக்பர். ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் நடத்திவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த தகராறில் அக்கும்பல் அக்பரை கடந்த 17ஆம் தேதி ரூபாய் 2கோடி பணம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பணத்தை கொடுத்து திவான் அக்பரை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு ரகசிய விசாரணையை தொடங்கினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தவ்பிக் அவனது நண்பர்கள் ஆல்பர்ட், உமாமகேஸ்வரன், ராஜா உள்ளிட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தவ்பிக் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவன் என்றும் இறைவன் ஒருவனே என்ற அமைப்பை கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி அதன் தலைவராக இருந்துள்ளார். தவ்பீக் மற்றும் அவனது நண்பர்கள் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட முயன்ற வழக்கு மற்றும் இரு கொலை வழக்குகள் உள்ளது.

ஏற்கனவே மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர போலீசார் கைது செய்த நிலையில், பிணையில் வந்த தவ்பிக் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சூழலில் திவான்அக்பர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சல்மா என்பவரை காதலித்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் திருச்சி மணிகண்டம் பகுதியில் யாசின் என்பவர் உதவியுடன் சல்மா வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.

சல்மா பாஸ்போர்ட் இன்றி திருச்சியில் வசித்து வந்த நிலையில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தவ்பிக் கொடுத்த தகவலின் பேரில் மணிகண்டம் போலீசார் சல்மாவை கைது செய்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொரனா தொற்று பரிசோதனைக்கு பின்னர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.