150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி: ஓட்டுனர் உடல் நசுங்கி பலி

29 October 2020, 6:14 pm
Quick Share

காஞ்சிபுரம்: சிறுதாமூரில் உள்ள கல்குவாரியில் 550 அடி ஆழத்தில் சரளை கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரி பிரேக் பிடிக்காததால் 150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் அருங்குன்றம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வந்தவண்ணம் உள்ளது. சிறுதாமூர், திருமுக்கூடல், மதூர், அருங்குன்றம் ,சாலவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

கல்குவாரியில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு எந்த நிறுவனங்களும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அளிப்பது இல்லை. இந்த குற்றச்சாட்டு ரொம்ப காலமாக நிலவி வருகின்றது .இந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளில் தினந்தோறும் ஒருவரோ அல்லது இருவரோ கற்களால் அடிப்பட்டும் மிஷினில் மாட்டிக்கொண்டும், அல்லது லாரியில் சிக்கிக் கொண்டும் இறந்து போகின்றனர். பலர் கைகால்களை இழந்து முடமாகும் அபாயம் தொடர்கின்றது.

சிறுதாமூர் பகுதியில் வைத்தியலிங்கம் என்பவர் நடத்தும் கல்குவாரி ஆலையில் உத்திரமேரூர் தாலுக்கா கிளக்காடி கிராமத்தை சேர்ந்த கோதண்டம் வயது 40 என்பவர் கல்குவாரியில் டாரஸ் லாரி ஓட்டி வருகிறார். இன்று விடியற்காலை சுமார் 550 அடி ஆழத்தில் இருந்து சரளைக்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது. 150 அடி உயரத்தில் மேல்நோக்கி லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காத காரணத்தினால் வலப்பக்கத்தில் சாய்ந்து 150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிந்தது . இந்த விபத்தில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் லாரி ஓட்டுனர் கோதண்டம் லாரியின் கீழே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் கிரேன் மூலம் லாரியை தூக்கி அடியில் மாட்டிக் கொண்டிருந்த கோதண்டத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே பகுதியில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு அதில் தொழிலாளர்கள் சிக்கி இறந்துபோவது தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பாக சாலவாக்கம் காவல்துறையினர் மற்றம் ரிப்போர்ட்டர்கள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு செல்வதால் இப்படிப்பட்ட சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது. தொழிலாளர்களும் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் கூட இதைப் பற்றி வெளியே கூறு தயங்குகின்றார்கள் .

(கடந்த ஒரு வாரத்தில் உதயம் கல்குவாரியில் இரண்டு பேர் படுகாயம். ஏகேஎஸ் கல்குவாரியில் ஒருவர் பலி). மூன்று நபர்கள் இறந்துபோனார்கள் .மூன்று நபர்கள் படுகாயமடைந்து கைகால்களை இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உள்ள அனைத்து கல்குவாரி மற்றும் கிரஷர்களும் சட்டத்துக்கு புறம்பாக அதிக ஆழத்திற்கு சென்று கற்களை வெடி வைத்து தகர்ப்பதால் விபரீதம் தெரியாமல் தொழிலாளர்களும் ,லாரி ஓட்டுனர்களும் விபத்தில் சிக்கி இறக்கின்றனர் . இதனை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ,மாவட்ட வருவாய் துறை, மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்கள் வந்து ஆய்வு செய்தால் இதுபோன்ற பிரச்சனைகளை குறைக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Views: - 23

0

0