ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

24 August 2020, 7:50 pm
Quick Share

கிருஷ்ணகிரி: சூளகிரி ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி வாணியர் தெருவை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு பகவதி, முரளி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்துள்ளர். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் சில மாதங்கள் விடுமுறையில் உள்ளதால் இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமின்றி கொண்டாடப்பட்டது. மேலும் அவர்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாட்டு வைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை கரைக்க சூளகிரி துரை ஏரிக்கு பகவதி மற்றும் முரளி சென்றுள்ளனர்.

அப்போது சிலையை ஏரியில் விட்டுவிட்டு ஏரியின் ஆழ பகுதிக்கு இருவரும் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழ பகுதியில் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறுஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.