அல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய மேலும் 14 சாராய வியாபாரிகள் சரண்

10 September 2020, 9:27 pm
Quick Share

வேலூர்: அல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய சாராய வியாபாரிகள் மேலும் 14 பேர் இன்று வேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் நேரில் சரண் அடைந்தனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகேயுள்ள ஜவ்வாது மலைதொடரில் உள்ள மலைகிராமமான அல்லேரியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சாராய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திவிட்டு கள்ளச்சாராயத்தை அழிக்க முயன்ற 7 காவலர்களின் மீது அல்லேரியை சேர்ந்த சாராய வியாபாரி கனேஷ் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் காவலர்களை தாக்கினார்கள் இதில் காயமடைந்தவர்கள் சி.எம்.சி மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தாக்கியவர்களை பிடிக்க 120 காவலர்கள் துப்பாக்கிகளுடன் அல்லேரி மலைக்கு சென்றனர் .

ஆனால் கிராமமே காலியாக இருந்தது. இதனால் மூன்று நாட்களுக்கும் மேலாக காவல்துறையினர் அல்லேரி மலை முகாமிட்டு காட்டுபகுதியில் தேடியும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி வேலூர் டி.எஸ்பி அலுவலகத்தில் சாராய வியாபாரி கனேஷ் மற்றும் அவரின் உறவினர் துரைசாமி ஆகிய இருவரும் நேரில் வந்து சரணடைந்தனர். மேலும் மற்றவர்களை தேடி வந்த நிலையில், இன்று 14 பேர் மலையிலிருந்து கீழே இறங்கி காவலர்களிடம் சரணடைந்தனர். அங்கிருந்து அவர்களை வேலூர் டி எஸ் பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

காடு முழுவதும் காவல்துறையினர் தேடியும் பிடிக்க முடியாத நிலையில் குற்றவாளிகள் அவர்களாகவே வந்து சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லேரி மலை காவல்துறை கிராம மக்கள் மோதலுக்கு காரணம் காவல்துறையினர் வீடுபுகுந்து தாக்கி மக்களிடம் பணங்களை பறித்து சென்றதால் தான் மக்கள் ஆத்திரமடைந்து காவல்துறையினரை தாக்கியதாக கூறப்பட்டு வருகிறது காட்டுபகுதியில் காவல்துறையினர் தொலைநோக்கி ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடியும் சிக்காதவர்கள் காட்டிலிருந்து தந்திரமாக வந்து நகரத்தில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 0

0

0