உதகை அரசு தாவரவியல் பூங்கா வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு திறக்கப்படும்: தோட்டக்கலை துறை தகவல்

Author: Udhayakumar Raman
26 June 2021, 1:58 pm
Quick Share

நீலகிரி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசு தாவரவியல் பூங்கா வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு திறக்கப்படும் என தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பூங்காக்களில் நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்கு பூங்கா திறக்கப்படவுள்ளது.

பூங்காவினுள் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக 200 ரூபாய் செலுத்தி அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் நாளொன்றுக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் நடைபயிற்சி மேற்கொள்வோரின் உடல் வெப்பநிலை கண்டறிந்து பூங்காவினுள் அனுமதிக்கப்படுவர். மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Views: - 111

0

0