அனுமதி இல்லாமல் மண் அள்ளிய வாகனங்கள்: வாகன ஓட்டுநர்களோடு பொதுமக்கள் வாக்குவாதம்

21 June 2021, 5:33 pm
Quick Share

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே சாலை ஓரங்களில் ஊராட்சி நிர்வாகம் அனுமதியில்லாமல் மண் அள்ளிய ஜெசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுநர்களோடு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெரியப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியன்வலசு பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள மண்ணை ஊராட்சி மன்ற அனுமதி இல்லாமல் அள்ளியதால் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜெசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி (பாஜக) தலைமையில் ஊர்பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மேலும் மண்ணை அள்ளியதோடு ஐந்து கிராமங்களுக்குச் செல்லக்கூடிய குடிநீர் குழாயையும் உடைத்ததால் வாகன ஓட்டுநர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் இம்மானுவேல்ராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி இல்லாமல் மண் அள்ளப் பயன்படுத்திய ஜெசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கணிமவளத் துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Views: - 95

0

0