காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அபராதம் விதித்த ஊர் பஞ்சாயத்து: சமரசம் செய்து அனுப்பிய போலீசார்

18 November 2020, 10:37 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஊர் பஞ்சாயத்தினர் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் என்கின்ற கனகு(26). இவர் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் ஜெயபிரியா(23) என்பவரை காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் ஊரை மதிக்காமல் திருமணம் செய்து கொண்டதால் ஊர் பஞ்சாயத்தினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், பெண் வீட்டாருக்கு ரூ 1 லட்சம் அபராதம் வித்து தீர்ப்பு அளித்துள்ளனர். அபராத தொகை கட்டமுடியததாலும், ஊர் பிரச்சனைகள் தாங்க முடியாமல் காதல் மனைவியுடன் வேலை தேடி சென்னைக்கு சென்றுள்ளார்.

கடந்த ஒன்றை ஆண்டுகளாக சென்னையில் ஓட்டுனராக வேலை செய்த வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வீளை இழுந்து ஊர் திரும்பி உள்ளார். தகவல் அறிந்து அதிமுக பிரமுகர்களான ஊர் நாட்டாமைகள்எல்லப்பன் மற்றும் நாகேஷ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியனருக்கு அபராதம் தொகையை கட்ட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை குமரேசன் ஊர் நாட்டான்மையிடம் ரூ.10 ஆயிரத்தை அபராத தொகை செலுத்தினார். கனகராஜ் அபராதம் தொகை கட்ட முடியாததால் கடந்த 10ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

மேலும் பெண்ணின் தந்தை குமரேசன் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். அபராத தொகை முழுமையாக கட்டாததால் வேலை செய்யும் இடத்தில் வேலை வழங்க கூடாது என்று ஊர் சார்பில் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று வாணியம்பாடி சரக காவல் உட்கோட்டம் சார்பில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீதி தீர்வுக்கான முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காதல் ஜோடிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், நாட்டான்மைகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் முகாம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தனர்.

இதனை அறிந்த போலீசார் புகார் சமந்தப்பட்டோர் தவிர அனைவரும் வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், ஜெயபிரியா ஆகியோர் மற்றும் இரு குடும்பத்தினர்களுக்கு ஊர் சார்பில் எந்த நிபந்தனைகளுக்கு விதிக்கக்கூடாது என்று ஊர் நாட்டான்மைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.