உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூசத் தேரோட்டம் : தடையை மீறி குவிந்த பக்தர்கள்…

Author: kavin kumar
18 January 2022, 6:43 pm
Quick Share

நெல்லை: உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூசத் தேரோட்டத்தில் தடுப்பூசி செலுத்தாத பக்தர்கள் போலீசார் தடுப்புகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் உவரியில் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் திருவிழாவான இன்று தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் நேற்று வரை அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தேரோட்டத்திற்கு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களை ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். அதன்படி கடும் சோதனைக்கு பிறகு கொரனோ தடுப்பூசி 2 தவணையும் செலுத்தியவர்கள் அதற்குரிய ஆவணங்களை காண்பித்தவர்கள் மட்டுமே கோவில் வளாக பகுதிக்குள் போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து ஏராளமான பக்தர்களை அனுமதிக்க மறுத்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென தடைகளைத் தாண்டி கோவிலுக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தைப்பூச திருவிழாவை காண்பதற்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் அவர்களையும் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கு வள்ளியூர் போலீஸ் ஏ.எஸ்.பி சமயசிங் மீனா தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 170

0

0