வாணகிரி – பூம்புகார் மீனவர்களிடையே மோதல்: பூம்புகாரை சேர்ந்த 4 விசை படகுகளுக்கு தீ வைப்பு…

Author: kavin kumar
14 August 2021, 6:41 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வாணகிரி – பூம்புகார் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் பூம்புகாரை சேர்ந்த 4 விசை படகுகளுக்கு தீ வைத்தால் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் திருமுல்லைவாசல் சந்திரபாடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் இன்று தடையை மீறி சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க சென்றனர்.இதனை எதிர்த்து மற்ற கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் மறிக்க முயன்றனர்.இதனால் கடலோர கிராமங்களில் காலை முதலே பதற்றமான சூழல் ஏற்பட்டது.தரங்கம்பாடி அருகே சுருக்குமடி வலையுடன் 36 விசை படகுகளில் சென்றவர்களை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 200 க்கும் மேற்பட்ட பைபர் படகில் சுற்றி வளைத்தனர். போலீசார் எச்சரிக்கையை அடுத்து சுருக்குமடி வலையுடன் சென்ற படகுகள் கரை திரும்பினர்.

அப்போது வாணகிரி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகின் மீது பூம்புகாரை சேர்ந்த விசை படகு மோதியது.இதில் பைபல் படகு உடைந்து மூழ்கிய நிலையில் வாணகிரியை சேர்ந்த சிலம்பரசன், வினோத் ஆகிய இரு மீனவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் பூம்புகார் கிராமத்தை சேர்ந்த நான்கு விசை படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் இரண்டு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பார் சுகுணாசிங் தலைமையில் நான்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 133

0

0