பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது புகார்: கறிக்கடை உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பல்

2 November 2020, 8:28 pm
Quick Share

வேலூர்: வேலூரில் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த கறிக்கடை உரிமையாளர் மீது மூன்று நபர்கள் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி சென்னை சாலையில் நீதிமன்ற கட்டிடத்திற்கு எதிர்புறம் பிஸ்மில்லா சிக்கன் கடையை நடத்தி வருபவர் சாதிக் (38). இவர் முட்டை மற்றும் கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆறு ஏழு மாதங்களாக சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி கும்பல் ஒன்று இவரிடம் ஒரு லட்சம் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் சாதிக் பணம் தரமறுத்ததுடன் சத்துவாச்சாரி காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவை அளித்தனர்.

இதில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தங்கள் மீதே புகார் அளிக்க தைரியம் உள்ளதா என கூறி மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் நீதிமன்றம் எதிரிலேயே கடையில் இருந்த சாதிக்கை தலை,கை முதுகு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதனை தடுக்க வந்த கடையின் ஊழியர்கள் இருவரையும் கத்தியால் வெட்டிவிடுவதாக மிரட்டி துரத்திவிட்டனர். சாதிக்கை கும்பல் வெட்டும் போது கடையிலிருந்த கறி மற்றும் முட்டைகள் முழுவதுமாக சேதமடைந்தது. படுகாயமடைந்த அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்துவாச்சாரி பகுதியில் தொடர்ந்து ஒரு கும்பல் வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டுவதும் பணம் தரமறுப்பவர்களை வெட்டுவதும் வாடிக்கையாகி உள்ளது. காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர். நீதிமன்ற வளாகம் அருகிலேயே துணிச்சலாக பணம் கேட்டு மிரட்டி வெட்டியதால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் காணப்படுகிறது.

Views: - 18

0

0