தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும்: தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் கோரிக்கை

8 September 2020, 3:14 pm
Quick Share

திருச்சி: தனியார் துறையிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு 90% வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி பிரஸ் கிளப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா காலத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் 541 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே துறையில் தொடர்ந்து இவ்வாறு நடந்து வருகிறது. இந்திய அரசு நிறுவனங்களில் 90% பணியிடங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க வேண்டும்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 10சதவீதத்திற்கு மேல் பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இத்தகைய சட்டங்கள் இல்லை. இதற்கு நேர்மாறாக 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு தேர்வு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இதர வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேரலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டது.

கொஞ்சநஞ்சம் இருந்த கட்டுப்பாடுகளையும் அதிமுக அரசு அறுத்தெரிந்துவிட்டது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே நிர்வாகம் என்று பேசும் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு உரிமை கோரும் சட்டம் அமலில் உள்ளது. தமிழகத்தில் அவ்வாறு சட்டம் இல்லை. அதனால் உடனடியாக மண்ணின் மைந்தர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மாநில அரசு பணிகளில் 100% மண்ணின் மைந்தர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

தனியார் துறையிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் 90% மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும். 10 சதவீதத்திற்கு மேல் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களைப் வெளியேற்றிவிட்டு தமிழகத்திலிருந்து தேர்வு எழுதி தேர்வு ஆகாமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதை கண்டித்து ஒரு வாரம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தொடர் மறியல் போராட்டம் வரும் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. மண்ணின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழர்கள் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 4

0

0