வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: திருநாவுக்கரசர் பேட்டி

24 November 2020, 8:41 pm
Quick Share

திருச்சி: திமுக கூட்டணி சிறப்பான முறையில் உள்ளதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விரைவில் தேர்தல் வர உள்ளதால் அதற்கு முன்னதாகவே வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க 43 மத்திய மற்றும் மாநில அரசு துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

கொரோனா தாக்குதல் இன்னும் முடியவில்லை. மேலும் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. அதனால் அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இதன் பின்னர் 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்படி அனைத்து செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களின் கேள்விக்கு பதில் கூறுகையில், “திமுக கூட்டணி சிறப்பான முறையில் உள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கூட்டணி வலுவாக இருப்பதால் மூன்று அல்லது நான்காவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. வாரிசு அரசியல் என்பது அனைத்து அரசியல் கட்சியிலும் உள்ளது. அனைத்து மாநிலங்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இத்தகைய வாரிசு நிலைப்பாடு உள்ளது. அரசியல்வாதியின் மகன் அரசியலுக்கு வரக்கூடாது என்பது கிடையாது.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் அதை முடிவு செய்து கொள்வார்கள். சட்டம் அனைவருக்கும் சமமானது. அதனால் வேல் யாத்திரைக்கும், உதயநிதி பிரச்சாரத்தின் மீதான நடவடிக்கையில் வேறுபாடு காட்டக்கூடாது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கட்சிக் கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆளுங்கட்சியினர் மக்களை எளிதாக சந்திக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை மட்டும் சந்திக்க விடாமல் தடுப்பது சரியல்ல என்றார்.

Views: - 0

0

0