விதிகளை மீறுவோர்க்கு அபராதம் என்ன? : கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு !

24 September 2020, 9:44 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விதிகளை மீறுவோர்க்கு குற்றத்தின் தன்மைக்கேற்ப எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:- கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருதல், பொது இடங்களில் எச்சில் துப்புதல், மற்றும் தனிநபர் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் போன்ற நிகழ்வுகளுக்காக உடனடி தண்டனை விதிக்கத்தக்கக் குற்றமாகக் கருதப்பட்டு அதற்கேற்ப அபராதம் விதித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

•முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200

•பொது இடங்களில் எச்சில் துப்புபவருக்கு ரூ.500

•தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500

•உடற்பயிற்சி கூடங்கள், சலூன் கடைகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், ஆகியவற்றிலும் இதர வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் இடங்களிலும், அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் முறையினை கடைப்பிடிக்காமல் இருப்பின் ரூ.5000

•நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் முறையினை கடைப்பிடிக்காமல் இருக்கும் தனிநபருக்கு ரூ.500

•அதே பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் விதி மீறலுக்கு ரூ.5000 என அபராதம் விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகையினை வசூலித்திட ஒவ்வொரு துறையிலும் அலுவலரை நிர்ணயம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத அலுவலரும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர் பதவிக்கு குறையாத அலுவலரும் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு குறையாத அலுவலரும், வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவிக்கு குறையாத அலுவலரும், அரசாணையின்படி அபராதம் விதித்து வசூலிக்கலாம்.

மேற்படி அபராதத் தொகையினை செலுத்தும் போது, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கையொப்பத்துடன் கூடிய முறையான ரசீதினை பெற்றுக் கொண்டு அபராதத் தொகையினை செலுத்திட வேண்டும். எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசு தெரிவித்துள்ள நிலையான வழிகாட்டுதல்களை தவறாமல் கடைப்பிடித்து பொதுநலன் மற்றும் நிர்வாக நலனை பேண ஒத்துழைக்கவேண்டும், அத்துடன் அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Views: - 9

0

0