பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி நகைகள் பறிப்பு…

5 August 2020, 10:31 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பாலாஜி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரதி, மகள் ரூபினி, மற்றும் உறவினர்கள் ரூபன், காமாட்சி ஆகியோர் வீட்டில் இருந்த போது பத்து நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி ரதி மற்றும் ரூபிணி ஆகியோரின் காது, கழுத்தில் இருந்த தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த 15 சவரன் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து அவர்கள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை அப்பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.