துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகளுடன் பெண் மனு…

10 August 2020, 4:34 pm
Quick Share

விருதுநகர்: துபாயில் பணிக்குச் சென்று உயிரிழந்த கணவரின் உடலை விருதுநகருக்கு கொண்டு வரவேண்டும் மேலும் கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி குழந்தைகளுடன் பெண் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியை சேர்ந்த விமலா என்பவரின் கணவர் அய்யனார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. அய்யனார் கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரின்டிங் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் வந்துவிட்டு மீண்டும் பணி புரிய துபாய் சென்று உள்ளார். பணிக்குச் சென்ற அய்யனார் தினமும் தனது குடும்பத்துடன் போனில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் மனைவி குழந்தைகளும் போனில் பேசியுள்ளார். இரவு தன்னிடம் உடம்பு சரியில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து படுக்க சென்ற அவர் இறந்துவிட்டதாக மறுநாள் காலை விமலாவின் உறவினர் மூலம் தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன் கணவர் துபாயில் இருந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் அவர் பணிபுரிந்த நிறுவனம் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டதாகவும், தன் குடும்பத்திற்கு இழப்பீடு ரூபாய் 1 லட்சம் தருவதாக பேரம் பேசியதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மேலும் தன் கணவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இறந்த கணவரின் உடலை துபாயில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோரிக்கை வைத்தார்.

Views: - 7

0

0