ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் பூட்டி பெண்கள் முற்றுகை போராட்டம்…

12 August 2020, 10:09 pm
Quick Share

அரியலூர்; சாத்தாம்பாடி கிராமத்தில் கள்ள மதுபானங்கள் விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் பூட்டி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த சாத்தாம்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மதுபானங்களை அருந்திவிட்டு சிலர் அவ்வழியே செல்லும் பெண்களை குடிபோதையில் தகாத வார்த்தைகளைகூறி கேலி செய்வதாக பெண்கள் குற்றம்சாட்டி வந்தனர். எனவே தங்களது கிராமத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடைசெய்யவேண்டும் என்று ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் பெண்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் எழுத்தர் ஆகியோரை அலுவலகத்தில் வைத்து பூட்டிவைத்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலக வாயிலில் கூடி நின்று கோஷம் எழுப்பியதோடு, ஊர்கட்டுப்பாடு விதித்து கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளித்தால்தான் அலுவலகத்தை திறந்து ஊராட்சி மன்ற தலைவரை வெளியில் விடுவோம் என்று உறுதிபட நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Views: - 4

0

0