கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளி: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு
23 September 2020, 9:54 pmகாஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையின் கட்டுமான பணியின்போது உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத தனியார் நிறுவன நிறுவனர் உட்பட 6 பேர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் தொழிற்சாலைகளில் பொருள்களுக்கும், பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியம் இருக்க வேண்டும். தலைக்கவசம், கையுறை, நெடி தாக்காமல் இருக்க முகமூடி, ஷூ, உயரத்தில் பணிபுரியும் போது பாதுகாப்பு பெல்ட் மற்றும் பாதுகாப்பு அரண் ஆகியவை கட்டாயம் இருத்தல் வேண்டும். மேலும் முதலுதவிப் பெட்டியும், அவசர சிகிச்சை அளிக்க தகுதியான ஒரு நபரும் இருத்தல் வேண்டும். கம்பெனியின் பரப்பளவுக்கு ஏற்றவாறு முக்கிய இடங்களில் தீயணைப்பான் கருவிகள் இருக்க வேண்டும். ஆனால் இதை எதையுமே பின்பற்றாமல் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் அசோக் லேலண்ட் டெஸ்டிங் யூனிட் என்ற பிரபல கனரக வாகன தொழிற்சாலையின் கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் தனியார் நிறுவனத்தின் கீழ் சூரியகுமார் என்கின்ற கட்டுமான தொழிலாளி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனியார் நிறுவனத்திற்குள் தரைப் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரும்பு ராடை சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறக்கும்போது அங்கு சரிவர நிலைநிறுத்தப்படாத இரும்பு கதவு திடீரென சூரியகுமார் மீது கழன்று விழுந்தது. இதில் சூரியகுமார் நிலைதடுமாறி 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து தலை நசுங்கி உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகம் பணியாளர்களுக்கு பணி செய்யும் பொழுது வழங்கப்படவேண்டிய தலைக்கவசம் , சேஃப்டி ஷுக்கள், ஹெல்மெட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி இருந்தால் சூரியகுமார் உயிரிழந்து இருக்கமாட்டார்.
எனவே தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் வேலை வாங்கியதாக சூரியகுமாரின் மகன் சிவச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பணியின்போது தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காத அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிறுவனர் எல்ரெட், குமார் , சந்தோஷ், திருமலை ,பிரபு, மேகநாதன் உள்ளிட்ட 6 பேர் மீது “தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தை செய்திருப்பதாக வழக்கு” பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.