குளச்சல் கடற்கரையில் கேக் வெட்டி உலக மீனவர் தினம் கொண்டாட்டம்

21 November 2020, 4:37 pm
Quick Share

கன்னியாகுமரி: தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் தலைமையில் உலக மீனவர் தினம் குளச்சல் கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

உலகம் மீனவர் தினத்தையொட்டி இன்று குமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் இன்று ஏராளமான மீனவர் பெண்கள், குழந்தைகள் ஒன்றுகூடி கடலையும் கடல்வாழ் மீன்களையும் மீன்பிடி கருவிகளையும் மீன் பிடிக்கின்ற மீனவர்களையும் இறைவன் ஆசீர்வதிக்கும் படியாக பிரார்த்தனை செய்யப்பட்டு   மலர் தூவி கடலுக்கும் மீனுக்கும் மரியாதை செலுத்தினர். பின்பு கடற்கரையில் மீனவக் குழந்தைகள் கேக்  வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ஆண்களுக்கு வடம் இழுத்தல் போட்டியும், பெண்களுக்கு  மீன் சுமந்து ஓடுதல் போட்டியும், குழந்தைகளுக்கு விளையாட்டுப்போட்டியும் நடத்தப்பட்டது. மீனவர்கள் தங்களது உலக மீனவர் தினத்தில் நீண்டநாள் கோரிக்கைகளை கையெழுத்திட்டு தமிழக முதல்வருக்கு மனுவாக அனுப்பினர்.

அதில் கூறப்பட்டிருந்தது:- தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களிலும் கடல்சார்ந்த மீன்பிடித் தொழிலை மீனவர்கள் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள 9 கடலோர மாநிலங்களிலும் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களிலும் மீனவர்கள் பாரத தேசத்துக்கு சுமார் 60,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை தனது மீன்பிடித்தொழில் மூலம் பெற்றுத் தருகிறது. தமிழக மீனவர்கள் குஜராத் மாநில மீனவர்களை பின்னுக்குத்தள்ளி இந்தியாவில் தமிழகத்தை 2020 -ல் மீன் பிடிப்பதிலும் உற்பத்தியிலும் முதல் இடத்தில் நிறுத்தியுள்ள பெருமை தமிழக மீனவர்களை சாரும். மீனவர்கள் தொடர்ந்து கடலிலும் கரையிலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள்.

எனவே உலக மீனவர் தினமாகிய இன்று மீனவர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு மத்திய அரசு வழியாக நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும். 60,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி பெற்று தருகின்ற மீனவர்களுக்கு மத்திய அரசில் மீன்வளத்துறை தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். தேசிய மீன்வள கொள்கை 2020 உடனடியாக கைவிட வேண்டும். மண்டல கமிஷன் பரிந்துரைப்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். அரசு வேலைகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆழ்கடலில் ஆபத்துகளில் சிக்கிக்கொண்ட மீனவர்களையும், மாயமான மீனவர்களை மீட்க  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் தளம், கடல் ஆம்புலன்ஸ் நிறுவவேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஈடுபட்டுள்ள விசைப்படகு மீனவர்களுக்கு  தொலைத்தொடர்பு கருவியான ரேடியோ டெலிபோன் வழங்க வேண்டும். மீன்வளத்துறை, கடலோர காவல் குழுமம், கடல் காவல்துறை, கடல் அமலாக்கப்பிரிவு  ஆகிய கடல் சார்ந்த துறைகளில் மீனவர்களுக்கு முக்கியத்துவம் பிரதிநிதித்துவம் வேலை வாய்ப்பில் வழங்க வேண்டும். கடலில் மீன் பிடிக்கின்ற பொழுது விபத்து , நோய் காரணமாக மருத்துவ வசதி எதுவும் கிடைக்கப் பெறாமல் மீனவர்கள் இறப்பு ,மாயமகுதல் ஏற்பட்டால் மீனவர்களுக்கு அரசு ரூபாய் பத்து லட்ச ரூபாய் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்ற  வகையில் தவறான கட்டுமான முறையில் கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களை உடனடியாக மாற்றியமைத்து மீனவர்களுக்கு பாதுகாப்பான மீன் பிடித்தலை உறுதிப்படுத்தவேண்டும். மீன் சார்ந்த தொழில் மேம்படுத்துவதற்கு கடலோர பகுதிகளில் பனிக்கட்டி ஆலை,  மீன்பதப்படுத்துதல் ஆலை  ஆகியவற்றுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.  மீன்பிடித்தல் தொழிலுக்கு தேவையான டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு சாலை வரி மற்றும் பசுமை  வரி இல்லாமல் மானியத்தில் மீனவர்களுக்கு வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 25

0

0